உள்ளூர் செய்திகள்

சாத்தனூர் அணை

சாத்தனூர் அணையில் 119 கன அடி தண்ணீர் தேக்க முடிவு

Published On 2022-07-19 09:49 GMT   |   Update On 2022-07-19 09:49 GMT
  • ரூ.90 கோடியில் மதகுகள் சீரமைக்கும் பணி நிறைவு பெறுகிறது
  • 150 கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் குடிநீர் வசதி பெறுகிறது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1958 -ல் கட்டப்பட்டது. இந்த அணை 119 அடி உயரம் கொண்டதாகும்‌ திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரம் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

இந்த மாவட்டங்களில் உள்ள 88 ஏரி குளங்களில் சாத்தனூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி திருவண்ணாமலை நகரம் மற்றும் செங்கம் உட்பட குறைந்தது 150 கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் குடிநீர் வசதி பெறுகிறது.

1958-ல் அணை கட்டப்பட்டதிலிருந்து அணையின் மதகுகள் சரி செய்யப்படவில்லை. மொத்தம் 20 மதகுகள் உள்ளன.இதில் 9 மதகுகள் 20 அடி உயரம் மற்றவை 15 அடி உயரம் கொண்டதாகும். அனைத்து மதகுகளும் 40 அடி அகலம் கொண்டவை.

மதகுகள் சீரமைக்கப்படாததால் 119 அடி கொண்ட சாத்தனூர் அணையில் இதுவரை 99 கன அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைத்திருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது.

இதனை தொடர்ந்து தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையை சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இங்குள்ள மதகு சீரமைக்கும்பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதகுகளை வலுப்படுத்தவும் அணையை சீரமைக்கவும் ரூ‌.90 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது.இதில் 201 குடியிருப்பு, மற்றும் அணையை சுற்றி 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது சாத்தனூர் அணையில் புதிய மதகுககள் சீரமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பருவ மழைக்கு முன்பாக இந்த பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த ஆண்டிலிருந்து சாத்தனூர் அணையில் மொத்த உயரமான 119 அடி வரை கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்‌

மேலும் முன்னதாக அணையின் பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News