திருவண்ணாமலை கோவிலில் சாமி வீதிஉலா வாகனங்கள் சீரமைப்பு பணிகள் தீவிரம்
- கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நடவடிக்கை
- கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகள் மும்முரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சாமி வீதிஉலா வாகனங்கள் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபவிழா வருகிற 27-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி அதிகாலை கோவிலின் கருவறையின் முன்பு சரியாக 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
கடந்த கொரோனோ பரவல் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக மாடவீதியில் சாமி உலா நடைபெறாமல் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. இதனால் பல்வேறு சாமி வீதி உலா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் முடிவடைந்து கட்டுப்பா டுகள் தளர்த்தப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மாடவீதியில் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சாமி வீதிஉலா வாகனங்கள் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
விழா நடைபெறும் 10 நாட்களும் காலை மாலை என இரு வேளைகளிலும் இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், புருஷாமிருகம், தங்க ரிஷ1ப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். அதன்படி சாமி மற்றும் அம்பாள் வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் ஆயிரம் கால் மண்டபம் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திர விமானம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு தற்போது பல்வேறு வண்ணங்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 7 ஆம் நாள் திருவிழா அன்று மாடவீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்க ளில் பொருத்தப்படும் குதிரைகளுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
கோவிலில் உள்ள சன்னதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.