கீழ்பென்னாத்தூரில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியில், அரசு முதன்மை செயலாளரும் தீரஜ்குமார் மற்றும் கலெக்டர் முருகேஷ் ஆகியோர் ஆய்வுபணி மேற்கொண்டு, மாணவர்களிடம் விடுதியில் உள்ள வசதிகளை கேட்டறிந்த காட்சி.
மாணவர் விடுதிகளில் முதன்மை செயலாளர் ஆய்வு
- அடிப்படை வசதிகள் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
- கலெக்டர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை புரிந்த அரசு முதன்மைச் செயலாளரும், வணிக வரித்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள மாணவ- மாணவிகள் விடுதிகளில் ஆய்வு பணி மேற்கொண்டார்.
விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் தேவைகள் குறித்தும், அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் முறையாக வழங்கப்படுகிறதா? எனவும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது மாணவிகள் விடுதிக்கு சுற்றுச்சுவர் வேண்டுமென்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டுமென்றும் கேட்டனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். விடுதிகளில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்தார்.
மேலும், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கலெக்டர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், பேரூராட்சி தலைவர் சரவணன், பேரூராட்சி கவுன்சிலர் பாக்யராஜ், ஜீவா மனோகர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.