உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர்கள் உத்தமர் காந்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-01-11 14:02 IST   |   Update On 2023-01-11 14:02:00 IST
  • 17-ந்தேதி கடைசி நாள்
  • கலெக்டர் முருகேஷ் தகவல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிவிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து இவ்விருதுக்காக கிராம ஊராட்சிகளை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தேர்வு குழுவினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைமை வகிக்கும் ஒரு கிராம ஊராட்சி, ஒரு மகளிர் தலைமை வகிக்கும் கிராம ஊராட்சி, இதர சிறந்த கிராம ஊராட்சிகள் 3 என்ற விகிதத்தில் 5 ஊராட்சிகளை தேர்வு செய்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அதன்படி சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தன்று உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதும் மற்றும் வரையறுக்கப்படாத நிதியாக ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

எனவே இவ்விருதுக்கு tnrd.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 17-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) விண்ணப்பிக்க அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களும் கேட்டுகொள்ள ப்படுகிறார்கள்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News