காட்டெருமை வேட்டையாடி அதன் கரியை வீட்டில் காய வைத்துள்ள காட்சி.
காட்டெருமையை வேட்டையாடி கறியை வீட்டில் காய வைத்திருந்த அவலம்
- 2 பேரை பிடிக்க வனத்துறை வேட்டை
- கறியை பறிமுதல் செய்தனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள வலசை இந்திராநகர் பகுதியை சேர்ந்த 2 பேர் வலசை மலைப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டு எருமையை வேட்டையாடி அதனை கூறு போட்டு சுமார் 15 கிலோ கறியை அவர்களது வீட்டினில் காய வைத்திருப்பதாக வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து வனசரகர் ராமநாதன் தலைமையில் இந்திரா நகர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு அதிரடியாக சென்ற வனத்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். வீட்டினுள் காட்டெருமை கறியை துணி காய வைப்பது போல் காய வைத்திருந்தனர்.
இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காட்டெருமை கறியை பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் வரும் தகவல் அறிந்து 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.