உள்ளூர் செய்திகள்

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

Published On 2023-03-30 08:59 GMT   |   Update On 2023-03-30 09:00 GMT
  • வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் கேட்டார்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாலுகா சீலப்பந்தல் மதுரா மோட்டூர் கிராமம் கொளக்கரைவாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 80). இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இவரது இளைய மகன் அதே பகுதியில் மெத்தை வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி வெங்கடாசலம் அவரது மகனுடன் கடந்த 21-ந்தேதி மல்லவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்தை அணுகும் போது அங்கு பணியில் இருந்த வணிக ஆய்வாளர் தேவி, அவர்கள் கொண்டு வந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு இந்த வேலையை நான் முடித்து தருகிறேன்.

எனக்கு ரூ.16 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னதாக தெரிகிறது. மேலும் ஆன்லைன் பரிவர்த்தனை முழுவதும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் அவர் சொல்லி அனுப்பி உள்ளார்.

இதனையடுத்து தேவி தனது உதவியாளருடன் 24-ந்தேதி மதுரா மோட்டூர் கிராமத்திற்கு சென்று மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட மெத்தை வீட்டை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து வெங்கடாசலம் 27-ந்தேதி மல்லவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தேவியிடம் கேட்ட போது ரூ.16 ஆயிரம் இல்லாமல் என்னால் மின் இணைப்பு வழங்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சி அடைந்த வெங்டாசலம் லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி, மைதிலி மற்றும் போலீசார் மல்லாவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வைத்து வணிக ஆய்வாளர் தேவி லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

கடந்த மாதம் இதே மின்சார துறையில் திருவண்ணாமலையில் போர்மேன் ரேணு என்பவர் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து மின்வாரிய துறையில் லஞ்சம் வாங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மின்சாரத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News