உள்ளூர் செய்திகள்

கலசப்பாக்கம் செய்யாற்றில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரும், கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.

செய்யாற்று திருவிழாவை முடித்து விட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு இன்று காலை திரும்பிய அருணாசலேஸ்வரர்

Published On 2023-01-29 15:05 IST   |   Update On 2023-01-29 15:05:00 IST
  • தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை:

ஆற்று திருவிழா முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் சாமி, கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரர் சாமி கலசப்பாக்கம் செய்யாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் காலமான உத்திராயணம் காலத்தை முன்னிட்டு ரதசப்தமி நாளான நேற்று கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா என்னும் தீர்த்தவாரி நடைபெற்றன.

இவ்விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மனுடன் நேற்று அதிகாலை கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு டிராக்டர் வாகனத்தில் புறப்பாடு செய்து திருவண்ணாமலையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவுக்கு சாலை மார்க்கமாகவே வந்தார்.

அப்போது அண்ணாமலையாருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டனர். மேலும் கலசப்பாக்கம் செய்யாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள தென்பள்ளிப்பட்டு கிராம மக்களின் சார்பில் அண்ணாமலையாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு ஆற்றுத் திருவிழாக்காக அண்ணாமலையார் பெரிய ரிஷப வாகனத்தில் செய்யாற்றில் இறங்கத் தொடங்கினார். அப்போது ஆற்றின் வடகறையில் கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் சாமியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில் இறங்கினார். செய்யாற்றில் இரண்டு சாமிகளும் நேருக்கு நேராக ஒரு சேர ஆற்றில் இறங்கி ஆனந்த நடனத்துடன் ஆடியபடியே உள்ளே இறங்கி வந்தனர்.

பக்தர்களின் பரவசத்துடன் இரண்டு சாமிகளும் தென்கிழக்கு பகுதியை நோக்கி சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்துவிட்டு பின்பு செய்யாற்றில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் தனித்தனியாக அமர்ந்து அண்ணாமலையாரும், திருமாமுடீஸ்வரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்பு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றன.

இவ்விழாவில் கலசப்பாக்கம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆற்று திருவிழாவை முடித்து கொண்டு அருணாசலேஸ்வரர் இன்று காலை திருவண்ணாமலை கோவிலுக்கு திரும்பினார்.

Tags:    

Similar News