உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பள்ளிகளில் கம்ப்யூட்டர்-இணையதள வசதி - கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை

Published On 2023-11-15 07:35 GMT   |   Update On 2023-11-15 07:35 GMT
  • 90 சதவீத பள்ளிகளில், இன்டர்நெட் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வசதியும் இல்லை.
  • தனியார் மையங்களுக்குச்சென்று ஆசிரியர்கள் விவரங்களை கல்வித்துறைக்கு அனுப்புகின்றனர்.

உடுமலை:

தமிழக கல்வித்துறையில் இருந்து பள்ளிகளுக்கு தகவல் அனுப்பப்படுவதில் இப்போது இணையதளம் மட்டுமே மிக முக்கிய பங்காற்றி வருகிறது. பள்ளியில் போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்படுவது, மாணவர்களின் விவரங்களை கேட்பது, அரசின் அறிவிப்புகள் என அனைத்துமே ஆன்லைன் வாயிலாக, அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்படுகிறது.

ஆனால், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளில், இன்டர்நெட் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வசதியும் இல்லை. இதனால் மொபைல் போன்களில் தான் இப்போதைய தகவல் பரிமாற்றம் நடக்கிறது. ஆனால் மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை அனுப்புவதற்கு, இவ்வசதி கட்டாயம் தேவையாக உள்ளது. குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில், இந்த வசதியில்லாததால் தனியார் மையங்களுக்குச்சென்று தான் ஆசிரியர்கள் விவரங்களை கல்வித்துறைக்கு அனுப்புகின்றனர்.

இதனால், வகுப்புகளும் பாதிக்கப்படுகிறது. நடுநிலைப்ப ள்ளிகளுக்கு இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், அத்திட்டம் அனைத்து பள்ளி களையும் சென்றடையவில்லை. மாணவர்களுக்கு நிகழ்கால எடுத்துக்காட்டுகள், ஆன்லைன் வாயிலாக வீடியோக்கள் காண்பிப்பதற்கும், அவர்களின் கல்வி தொடர்பாக செயல்படுவதற்கும், இன்டர்நெட் வசதி தேவையாக உள்ளது. தற்போது வரை ஆசிரியர்களின் மொபைல் போன்களுக்கென போடப்படும் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் பல நேரங்களில், சர்வர் பிரச்சினையால் இணைய வசதி செயல்படுவது இல்லை. எனவே பள்ளிகளில் தடையில்லா இன்டர்நெட் சேவை பெறுவதற்கும், கம்ப்யூட்டர் வசதி வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினரும், கல்வி ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News