உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மேம்பட - சிறு தானிய சாகுபடி சிறப்பு திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?

Published On 2022-11-30 06:47 GMT   |   Update On 2022-11-30 06:47 GMT
  • இடுபொருட்கள் கிடைக்காததால் சில சிறு தானிய சாகுபடியை மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.
  • ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில், சிறுதானியங்கள் விளைவித்து வருகின்றனர்.

உடுமலை : 

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் உணவிற்காக பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.குறிப்பாக நெல், சிறு தானியங்கள் மற்றும் மொச்சை ஆகிய சாகுபடி மலைவாழ் மக்களால் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. விளைபொருட்களை பிற பகுதிகளுக்கு கொண்டு வந்தும் விற்பனை செய்து வந்தனர்.தொழில்நுட்ப விழிப்புணர்வு இல்லாதது மற்றும் விதை உட்பட இடுபொருட்கள் கிடைக்காததால் சில சிறு தானிய சாகுபடியை மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.

குறிப்பாக குழிப்பட்டி, மாவடப்பு, கோடந்தூர்போன்ற மலைவாழ் குடியிருப்புகளில் சாமை, ராகி போன்ற சிறு தானிய சாகுபடிகள் முற்றிலுமாக காணாமல் போனது.

இது குறித்து கடந்த 2018ல் மலைவாழ் மக்கள், விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அளித்த மனுக்கள் அடிப்படையில் வேளாண்துறை நடவடிக்கை எடுத்தது.சிறப்பு திட்டத்தின் கீழ் குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டான்பாறை, ஆட்டுமலை, கோடந்தூர் ஆகிய மலைவாழ் குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டன.அங்குள்ள மக்களுக்கு, ராகி, சாமை ஆகிய விதைகள் மானியத்தில் வேளாண்துறையால் வழங்கப்பட்டன.

பின்னர், நுண்ணுாட்டச்சத்து உட்பட இடுபொருட்களும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறையினர் வழங்கினர்.இத்திட்டம் ஓராண்டு மட்டும் செயல்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது. இதே போல் தேனீ வளர்ப்பு திட்டமும் சில மலைவாழ் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.தற்போது உடுமலை பகுதிகளிலுள்ள 15 மலைவாழ் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், விவசாய சாகுபடி மேற்கொள்ளும் வகையில் விவசாய நிலத்திற்கான தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டுள்ளது.

விடுபட்டவர்களுக்கு ஆவணம் வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது. எனவே தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளுக்கு பிறகு தங்கள் குடியிருப்பை ஒட்டிய விளைநிலங்களில் பல்வேறு சாகுபடி மேற்கொள்ள மலைவாழ் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.அங்குள்ள சிற்றாறுகளிலும் நிலையான நீர்வரத்து உள்ளது. எனவே சிறப்பு திட்டத்தை அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் செயல்படுத்தவும், இந்த சீசனில் சிறு தானிய சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும்.

மேலும் அரசு வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செயல்படுத்தும் திட்டங்களில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த மானியத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஆவணங்கள் இல்லாததால் மலைவாழ் கிராமங்களை இத்திட்டங்கள் எட்டவில்லை. தற்போது விளைநிலங்களுக்கான ஆவணம் வழங்கப்பட்டுள்ளதால், மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜல்லிபட்டி அருகே, ஈசல்திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பில் ராகி, மொச்சை என பல்வேறு சிறுதானிய சாகுபடியில் அம்மக்கள் ஈடுபட்டுள்ளனர். ரசாயன உரங்கள் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில், சிறுதானியங்கள் விளைவித்து வருகின்றனர்.அவர்களுக்கு தேவையான விதை, இயற்கை வழி இடுபொருட்கள் மற்றும் ஸ்பிரேயர் உட்பட வேளாண்எந்திரங்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.இதுகுறித்து கடந்த வாரம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், மனு அளித்துள்ளனர்.மலைப்பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப விளையும் சாகுபடிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை வாயிலாக ஆய்வு செய்து, பரிந்துரைகள் வழங்க வேண்டும்.மலைவாழ் மக்கள், சிறுதானிய பயிர் உற்பத்திக்கு ஊக்குவித்தால் இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்கள் மக்களுக்கு கிடைக்கும் என்பதால் அரசுத்துறைகள் கவனம் செலுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News