உள்ளூர் செய்திகள்

தண்டாயுதபாணியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு வெளியே வந்த காட்சி. 

போக்சோ வழக்கில் விடுதலையான வாலிபருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த திருப்பூர் மகளிர் போலீசார்

Published On 2023-03-01 10:49 GMT   |   Update On 2023-03-01 10:49 GMT
  • 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததுடன் கொலை செய்ய முயற்சி செய்ததாக புகார் வந்தது.
  • திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் தண்டாயுதபாணி விடுதலை செய்யப்பட்டார்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது 36) .கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சொந்த ஊராக கொண்ட இவர் கடந்த 12.4.2013ம் தேதி போயம்பாளையம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததுடன் கொலை செய்ய முயற்சி செய்ததாக புகார் வந்தது. புகாரின் பேரில் தண்டாயுதபாணி வடக்கு அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தண்டாயுதபாணி விடுதலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் தண்டாயுதபாணி குற்றம் செய்ததை புலன் விசாரணையில் கண்டறிந்த போலீசார் மேல்முறையீடு செய்து வழக்கினை நடத்திட முடிவு செய்தனர். அதன்படி போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடந்து வந்த நிலையில் தலைமறைவாக இருந்த தண்டபாணியை தீர்ப்பு நாளான நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதில் தண்டாயுதபாணிக்கு போக்சோ குற்றத்திற்கு 10 வருடமும், கொலை முயற்சிக்கு 10 வருடமும் மற்றும் வீட்டினுள் அத்துமீறி நுழைந்ததற்கு 7 வருடமும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தண்டனை அளிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 10.5 லட்சம் கொடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் உதவி ஆணையர் அனில்குமார், கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் கலாவதி மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் பாராட்டினார்.குற்றவாளி இவர் தான் என்பதை உறுதி செய்த நிலையில், உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தி போலீசார் தண்டனை பெற்றுதந்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது.

Tags:    

Similar News