உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வனவிலங்குகள் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

Published On 2023-04-12 15:37 IST   |   Update On 2023-04-12 15:37:00 IST
  • தற்போது வனத்துக்குள் உள்ள நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டுள்ளது.
  • வேட்டைக்கும்பலால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் வனத்துறையினர் கவனம் செலுத்துகின்றனர்.

உடுமலை:

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இங்கு மான், காட்டெருமை, யானை, புலி, சிறுத்தை, கரடி, உடும்பு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ள இங்கு தற்போது கோடை காலமாக இருப்பதால் வன விலங்குகளை பாதுகாப்பதில் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வன விலங்குகள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் வனப்பகுதிக்குள் உள்ள சிற்றாறுகள், ஓடைகள், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் விலங்குகளின் தாகம் தணிக்க உதவும்.

ஆனால் தற்போது வனத்துக்குள் உள்ள நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வனப்பகுதியில் ஆங்காங்கே வனத்துறையின் சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. ஆரம்ப காலங்களில் லாரிகள் மூலம் கொண்டு சென்று இந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆனால் அதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களால் அந்தந்த பகுதிகளில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து சோலார் ேமாட்டார் மூலம் வனத்துறையினர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வந்தனர்.

தற்போது வன விலங்குகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் வகையில் சோலார் தானியங்கி மோட்டார்களை பல இடங்களில் அமைத்துள்ளனர். ேமலும் அந்த பகுதிகளில் வனவிலங்குகள் வருவதால் அதனை குறிவைத்து வேட்டைக்கும்பலால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் வனத்துறையினர் கவனம் செலுத்துகின்றனர். அதன்படி அந்த பகுதிகளில் கேமரா பொருத்தி தீவிரமாக கண்காணித்து வனவிலங்குகள் சாலைக்கு வருவது பெருமளவு தவிர்க்கப்படும். 

Tags:    

Similar News