உள்ளூர் செய்திகள்

விக்கிரமராஜா மேடையில் பேசிய காட்சி.

விலைவாசி உயர்வுக்கும் வியாபாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - விக்கிரமராஜா பேச்சு

Published On 2022-09-14 06:28 GMT   |   Update On 2022-09-14 06:28 GMT
  • வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை மாற்றி அமைக்கவும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.
  • வணிகர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்.

பல்லடம் :

பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சங்க கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் கடைவீதியில் நடைபெற்றது கூட்டத்திற்கு பல்லடம் சங்க தலைவர் ராம்.கண்ணையன் தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் தனசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சங்க கொடியை ஏற்றி வைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றவும். வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை மாற்றி அமைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும். வணிகர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும், மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்.

பல்லடத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண வேண்டும். கிடப்பில் உள்ள புறவழிச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளோம். பெதப்பம்பட்டியில் நிலவும் கால்வாய் பிரச்சனைக்கு அரசு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். தவறினால் போராட்டம் விரைவில் நடத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, செஸ், சுங்கச்சாவடி கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு போன்றவையால் விலைவாசி உயர்வு அடைய காரணமாக அமைகிறது. அவற்றை நீக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

தற்போது 20 சதவீதம் முதல் 25 சதவீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.இது மேலும் உயர்ந்து 35 சதவீதமாக உயரும் ஆபத்து உள்ளது. விலைவாசி உயர்விற்கும் வியாபாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செலவுகள் உட்பட அசல் விலையுடன் சேர்த்து லாபம் வைத்து பொருள் விற்பனை செய்வது மட்டுமே வியாபாரியின் வேலை. அந்த பொருட்களை விலை கொடுத்து வாங்குபவர்கள் மக்கள் தான். அதனால் அதன் விலையேற்ற சுமையை மக்கள் தான் ஏற்கிறார்கள். பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய கடமை மத்திய,மாநில அரசுகளுக்கு தான் உள்ளது. அதனை செயல்படுத்த ஆட்சியாளர்களை கோரிக்கைகள் மூலம் வலியுறுத்துவோம் என்றார்.இதில் கோவை மண்டல தலைவர் டி.ஆர்.சந்திரசேகரன், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் லாலா கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News