உள்ளூர் செய்திகள்
கோப்புபடம். 

மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்- மாணவிகளின் விவரம் சேகரிக்கும் பணிகள் மும்முரம்

Published On 2022-06-08 07:00 GMT   |   Update On 2022-06-08 07:00 GMT
  • கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் என்ற பெயரில் வழங்கப்பட்டது.
  • உயர்கல்வி பயிலும் மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

திருப்பூர்:

சமூக நலத்துறையின் கீழ், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா., மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித்திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம் என, 5 திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளாக பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தன.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இதில் ஒரு மாணவி 10, பிளஸ் 2 முடித்திருந்தால் திருமணத்தின்போது 25 ஆயிரம் தொகை, ஒரு பவுன் தங்க காசு, டிகிரி முடிந்திருந்தால், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு பவுன் தங்க காசு பெற்றுவந்தனர்.நிதிபற்றாக்குறையை காரணம் காட்டி தி.மு.க., அரசு இத்திட்டத்தையே உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றியுள்ளது. இதன்கீழ் அரசு பள்ளிகளில், 6-ம்வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகள், கல்லுாரி, பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ.,யில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறையினர் கூறுகையில், ''உயர்கல்வி பயிலும் மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவிகளின் விவரங்களை சமூக நலத்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். கல்லூரி மாணவிகளின் விவரங்கள் திரட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.மாணவிகள் விண்ணப்பிக்க ஏதுவாக பிரத்யேக இணையதளம் மற்றும் ெசல்போன செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது. நிறைவடையும் பட்சத்தில் ஆன்லைனிலே விண்ணப்பிக்கலாம் என்றனர்.

Tags:    

Similar News