உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

வடகிழக்கு பருவமழை - அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ள மேயர் உத்தரவு

Published On 2022-10-15 05:20 GMT   |   Update On 2022-10-15 05:20 GMT
  • துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • இளம் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி ஆணையாளர்களிடம் மேயர் அறிவுறுத்தினார்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வார்டு பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் இடங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியில்லாத பகுதிகள், கடந்த காலங்கள் முதல் தற்போது வரை மழைநீர் வெளியேற உரிய வடிகால் வச–தியில்லாத இடங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

அவ்வாறு பாதிப்பு ஏற்படும் மாநகராட்சியின் வடக்கு பகுதிகளான பாண்டியன்நகர், தோட்டத்துப்பாளையம், மும்மூர்த்திநகர், பாலன்நகர், அங்கேரிப்பாளையம், தெற்கு பகுதிகளான காசிபாளையம், கே.என்.பி. காலனி, சுப்பிரமணியம் நகர், திருவள்ளுவர் நகர், வீரபாண்டி பகுதிகளில் மழைக்காலத்தில் மழைநீர் முழுவதும் வெளியேறும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

தனியார் இடங்கள் வழியாக மழைநீர் வெளியேறும்போது இடத்தின் உரிமையாளரிடம், கவுன்சிலர்கள், தன்னார்வ உறுப்பினர்கள் உதவியுடன் நேரில் தொடர்பு கொண்டு மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி ஆணையாளர்களிடம் மேயர் அறிவுறுத்தினார்.

மழைக்காலத்தில் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை அதிகமாக எதிர்பார்க்கப்படும் மாநகராட்சி பகுதிகளில் அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News