உள்ளூர் செய்திகள்
கோப்புபடம். 

நஞ்சராயன்குளத்துக்கு அரிய வகை வெளிநாட்டு பறவை வருகை

Published On 2022-09-23 07:29 GMT   |   Update On 2022-09-23 07:29 GMT
  • சைபீரிய பகுதிகளிலிருந்து வலசை வரும் இப்பறவையை கடற்கரை பகுதிகளில் அரிதாகவே பார்க்க முடியும்.உள்நாட்டு நீர் நிலைகளில் பார்க்க முடியாது.
  • உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன.

திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இங்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. இயற்கை ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து நஞ்சராயன் குளத்தை தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது.முதன்முறையாக தடித்த அலகு மண்கொத்தி பறவை நஞ்சராயன் குளத்துக்கு வந்துள்ளது. இதனை இயற்கை கழக உறுப்பினர்கள் கார்த்திகேயன், இளங்கோவன் படம் பிடித்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-

நஞ்சராயன் குளத்துக்கு முதன்முறையாக தடித்த அலகு மண்கொத்தி பறவை வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கூட இந்த பறவை பதிவாகவில்லை. கிழக்கு அமெரிக்கா, கனடா, சைபீரிய பகுதிகளிலிருந்து வலசை வரும் இப்பறவையை கடற்கரை பகுதிகளில் அரிதாகவே பார்க்க முடியும்.உள்நாட்டு நீர் நிலைகளில் பார்க்க முடியாது.

2022 - 23 குளிர் கால வலசையில் தடித்த அலகு மண்கொத்தி திருப்பூர் வந்திருப்பது சிறப்பு. நஞ்ச ராயன்குளத்தில் இதுவரை உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் மொத்தம் 181 பதிவாகியுள்ளன. வெளிநாட்டு பறவைகள் மட்டும் 45 பதிவாகியுள்ளன.தற்போது வந்துள்ள இந்த பறவை, 2 ,3 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்குமா அல்லது ஓரிரு நாட்களில் இருந்துவிட்டு கடந்து செல்லப்போகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

நஞ்சராயன் குளத்துக்கு தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, கிளுவை வாத்துக்கள், சதுப்பு மண் கொத்தி, பொரி மண் கொத்தி, சிறிய பட்டாணி, உப்புக்கொத்தி என ஏராளமான வெளிநாட்டு பறவைகள் ஏற்கனவே வந்துள்ளன.

Tags:    

Similar News