உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பீக்ஹவர் மின்கட்டணத்தை ரத்து செய்ய கோரி திருப்பூரில் 4-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் - தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு

Published On 2023-11-23 06:40 GMT   |   Update On 2023-11-23 06:40 GMT
  • தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது.
  • வருகிற டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடக்கும்.

திருப்பூர்:

தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் என்றும் பாராமல், பீக் ஹவர் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மின்சார நிலை கட்டணம் 430 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் சொந்த முயற்சியில் அமைத்த மேற்கூரை சோலார் மின் கட்டமைப்புக்கு யூனிட்டுக்கு 1.54 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண உயர்வு மற்றும் பீக்ஹவர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி தொழில்துறையினர் போராடி வருகின்றனர்.

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி மாநில அளவிலான, அறப்போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக மனிதசங்கிலி போராட்டம், வருகிற 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் நடக்குமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் தொழில் அமைப்பு கூட்டமைப்பினர் கூறியதாவது:- மின் கட்டண உயர்வால், திருப்பூர் பனியன் தொழில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இனியும் தொழில் நடத்த முடியாது என்பதால் பீக் ஹவர் மின் கட்டணம் உள்ளிட்ட கட்டண உயர்வுகளை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். அதன்படி வருகிற டிசம்பர் 4-ந் தேதி, மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடக்கும். அன்றைய தினம், திருப்பூர் குமரன் சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மனித சங்கிலி நடத்தப்படும். தொழில்துறையினர் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் குடும்பத்துடன் இப்போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மனித சங்கிலி போராட்டத்துக்கு பின்னரும் தமிழக அரசு அழைத்து பேசி, தீர்வு வழங்காதபட்சத்தில் 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News