உள்ளூர் செய்திகள்

அமராவதி அணை  

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் கடல் போல் காட்சியளிக்கும் அமராவதி அணை

Published On 2022-12-02 13:10 IST   |   Update On 2022-12-02 13:10:00 IST
  • அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த 11ந் தேதி நிரம்பியது.
  • அமராவதி அணையில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 90 அடியில் 89.47 அடியாக உள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்மேற்கு பருவ மழையால் கடந்த ஜூலை 15ந்தேதி அணை நிரம்பி தொடர்ந்து 3 மாதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த 11ந் தேதி நிரம்பியது.தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் மழை குறைந்து அணைக்கு நீர்வரத்து சரிந்தது.

இதனையடுத்து அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.இருப்பினும், வரத்தும் நீர் திறப்பும் சமமாக உள்ளதால் அணை நீர்மட்டம் கடந்த 20 நாட்களாக ததும்பிய நிலையில் காணப்படுகிறது. அணை மொத்த நீர்மட்டத்தில், அரை அடி மட்டுமே மீதம் உள்ளது. அணை முழு கொள்ளளவில் நீர் தேங்கியுள்ளதால் கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது.

அமராவதி அணையில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 90 அடியில் 89.47 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கனஅடியில் 3,999.12 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 626 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு ஆற்றில் 438 கனஅடி நீரும், பிரதான கால்வாயில் 250 கனஅடி நீரும், கல்லாபுரம், ராமகுளம் கால்வாய்களில் 35 கனஅடி நீர் என 723 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News