கோப்புபடம்.
முழு கொள்ளளவில் காட்சியளிக்கும் அமராவதி அணை
- வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கணிசமான அளவு நீர் வரத்து இருக்கும்.
- அணையின் நீர்மட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முழு கொள்ளளவில் இருந்து வருகிறது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன .
ஆண்டுதோறும் பழைய ஆயகட்டுப்பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயகட்டுப்பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தவிர கல்லாபுரம், ராமகுளம் நேரடி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேலும் தென்மேற்கு பருவமழை காலம் அனைத்து முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் பாம்பாறு, கூட்டாறு, தேனாறுகளில் நீர் பெருக்கெடுத்து தூவானம் அருவி வழியாக அணைக்கு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கணிசமான அளவு நீர் வரத்து இருக்கும்.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முழு கொள்ளளவில் இருந்து வருகிறது. தற்போது நீர்மட்டம் 89.47 அடியாக உள்ளது. 830 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 767 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.