உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

எச்.ஐ.வி., பரிசோதனை மையங்களை மூட எதிர்ப்பு தெரிவித்து 27-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-14 10:04 GMT   |   Update On 2023-07-14 10:04 GMT
  • 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
  • தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.

 திருப்பூர்:

தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் ஆகியவற்றில் 377 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் 186 மையங்களை மூட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி கூறியதாவது:-

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், தமிழகத்தில் 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவையில் பாதிப்பு ஏற்படும். எச்.ஐ.வி. நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உருவாகும். அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது.

ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து வழங்கும் மையங்களை தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தொடங்க மத்திய அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது. இதனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து மாத்திரைகளை பணம் கொடுத்து பெறும் நிலை ஏற்படும். தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 27-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News