உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வெளி மாநிலத்தவருக்கு பொருட்கள் வழங்காவிட்டால் நடவடிக்கை - ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை

Published On 2023-09-12 08:18 GMT   |   Update On 2023-09-12 08:18 GMT
  • இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது.
  • ரேஷன் கடைகளில் இருந்த விரல் ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

திருப்பூர்,:

தமிழக ரேஷன் கடைகளில் பிற மாநிலத்தவருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் கீழ் தமிழக கார்டுதாரர்கள், எந்த மாநில ரேஷன் கடையிலும் அரிசி, கோதுமை வாங்கலாம். தமிழக ரேஷன் கடைகளில் பிற மாநில கார்டுதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்ய, தமிழகத்தை சேர்ந்த கார்டுதாரர்களின் வீடுகளில் இந்தாண்டு ஜூலையில் விண்ணப்பம் வழங்கியது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் விண்ணப்பதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டன.

இதற்கு ரேஷன் கடைகளில் இருந்த விரல் ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அதனால் அம்மாத இறுதியில் பிற மாநிலத்தவருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஆகஸ்டில் இருந்து மீண்டும் பொருட்கள் வழங்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் பல கடைகளில் பிற மாநிலத்தவருக்கு ரேஷன் பொருட்களை வழங்க ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், பிற மாநிலத்தவருக்கு வழங்குவதற்கு ஏற்ப கூடுதலாக பொருட்களை அனுப்புவதில்லை. அதனால் அவர்களுக்கு வினியோகிக்க முடிவதில்லை என்றனர்.

உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மிகவும் ஏழ்மையில் உள்ளதால், ரேஷன் கார்டை குடும்பத்தினரிடம் வழங்கி விட்டு வந்துள்ளனர். இதனால் பலர் தமிழகத்தில் பொருட்களை வாங்குவதில்லை.ஜூலையில் 381, ஆகஸ்டில் 615,இம்மாதத்தில் 90 பேர் பொருட்களை வாங்கியுள்ளனர். பிற மாநிலத்தவருக்கு பொருட்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News