உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட கடைகள்.

ஏலகிரி மலையில் படகு சவாரி செல்லும் நடைப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2023-04-06 15:13 IST   |   Update On 2023-04-06 15:13:00 IST
  • நோட்டீஸ் வழங்கியும் அகற்றாததால் நடவடிக்கை
  • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் வகையில் ஊராட்சி மன்ற சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக ஏலகிரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். படகு சவாரி, இயற்கை பூங்கா, சாகச விளையாட்டுகள், பறவைகள் சரணாலயம், உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனால் அண்டை மாநிலங்களான கர்நாடக, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வார விடுமுறை நாட்களில் குவிந்து வருகின்றனர். புங்கனூர் பகுதியில் படகு சவாரி இல்லம் அமைந்துள்ளது.

இது முக்கிய சாலையிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சாலையின் இரு பக்கங்களிலும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்காக நடைபாதைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நடைபாதையில் அப்பகுதி மக்கள் கடைகள் வைத்து, ஷீட்டுகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனால் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் படகு இல்ல சாலைகளில் கூட்ட நெரிசல்கள், வாகன நெரிசல்கள் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடக்க வழி வகை செய்ய வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆணைக்கிணங்க திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் ரவிமாராஜன், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஆகியோர் ஆக்கிரமித்து இருந்த கடைகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினர்.

ஆனால் இதுவரை கடைகளை அகற்றாததால் வருவாய்த்துறையினர் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்து பொக்மூலைன் எந்திரம் மூலம் கடைகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக, நடைபாதைகளில் இருந்த கடைகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு கடைகளை அகற்றக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கடைகளை அகற்ற துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இதனை பெரிதும் பொருட்படுத்தாமல் கடைகளை அகற்றாமல் இருந்த நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடைபாதையில் நடந்து செல்ல வழிவகை செய்யப்படும் என்றனர். உடன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணைத் தலைவர் திருமால், ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News