ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு முறையாக ஊக்குவிப்பு நிதி வழங்க வேண்டும் -இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக்குழு கூட்டம் இண்டூரில் நடைபெற்றது.
- ஊக்குவிப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இண்டூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக்குழு கூட்டம் வட்டார துணைச் செயலாளர் மாதையன் தலைமையில் இண்டூரில் நடைபெற்றது.
கூட்டத்தில் இம்மாதம் 29-ம் தேதி தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் இண்டூர் பகுதியில் இருந்து திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் நல்லம்பள்ளி ஒன்றியத்தை பிரித்து இண்டூரை தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியம் ஏற்படுத்தவேண்டும். நாகலாபுரத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க மையத்தை இண்டூரில் அமைக்கவேண்டும்.
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் இல்லாமல் முறையாக பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சுடுகாடு இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் சுடுகாடு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்காமல் மறுப்பதை கலெக்டர் கண்காணித்து மாணவ, மாணவிகளுக்கு முறையாக ஊக்குவிப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.