உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஓ.வுக்கு கொடுத்த ரூ.35 ஆயிரத்தை திருப்பி கேட்ட விவசாயிக்கு மிரட்டல்

Published On 2023-07-03 08:24 GMT   |   Update On 2023-07-03 08:24 GMT
  • கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவில் பெயர் சேர்க்கவில்லை.
  • குத்தாலிங்கத்தை கார் ஏற்றி கொலை செய்துவிடுவதாக வி.ஏ.ஓ. மிரட்டியதாக தெரிகிறது.

தென்காசி:

ஆலங்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குத்தாலிங்கம். விவசாயி. இவர் தனது தந்தையின் பூர்வீக விவசாய நிலத்துக்கான பட்டாவில் தன் பெயரையும், தனது சகோதரர்கள் பெயரையும் சேர்க்க வேண்டி கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். மேலும் பட்டா பெறுவதற்காக ஆண்டிபட்டியை சேர்ந்த ஒருவர் மூலம் ரூ.35 ஆயிரம் லஞ்சமாக ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு தரகராக செயல்பட்ட 2 பேருக்கு மொத்தம் ரூ.6 ஆயிரமும் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவில் பெயர் சேர்க்கவில்லை. இதுபற்றி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் குத்தாலிங்கம் புகார் அளித்தார். அதன்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி பட்டாவில் பெயர் சேர்க்கவும், அதற்காக வி.ஏ.ஓ. பெற்ற ரூ.35 ஆயிரத்தை குத்தாலிங்கத்திடம் திருப்பி ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த கிராம நிர்வாக அலுவலர், தன் மீது புகார் செய்த குத்தாலிங்கத்தை கார் ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த குத்தாலிங்கம் செய்வதறியாது திகைத்த நிலையில் கிராம நிர்வாக அலுவலரிடம், அவரது சக அதிகாரிகள் சமரசம் பேசினர். ஆனாலும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பட்டாவிலும் பெயர் சேர்க்கவில்லை. இதனால் விவசாயி மீண்டும் கலெக்டரை நாட முடிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News