உள்ளூர் செய்திகள்

காமராஜ்.

கே.எஸ்.அழகிரியை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

Published On 2022-11-18 09:47 GMT   |   Update On 2022-11-18 09:47 GMT
  • தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் காமராஜ்.
  • காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை.

கோவில்பட்டி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் காமராஜ். இவர் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை என்று கூறி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை கண் டித்து பதவி விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புக்கள் போடப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்து ஆலோசிக்கமால் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் வெளியிடவில்லை. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார்.

கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சி தொண்டர்களை அடிக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது.

எனவே காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் நான் தொடர விரும்பவில்லை. எனது ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

காமராஜ் ராஜினாமா செய்தது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News