சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
செய்யாறு- ஆற்காடு சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்
- அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
செய்யாறு:
செய்யாறு அடுத்த மோரணம் ஏ காலணியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் புறம்போக்கு இடம் உள்ளது. அதில் தனிநபர் ஒரு வீடு கட்டி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கோவிலை சுற்றி வேலி அமைத்தனர். இந்த வேலியை தனி நபர் அகற்றி உள்ளார். இதனால் ஆத்திரம் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இரவு செய்யாறு -ஆற்காடு சாலையில் வேலியை அகற்றியவரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.