உள்ளூர் செய்திகள்

முத்து அய்யனார் கோவிலில் உண்டியல்களை உடைத்து ரூ.1.50 லட்சம் கொள்ளை

Published On 2025-02-14 10:23 IST   |   Update On 2025-02-14 10:23:00 IST
  • கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
  • கோவிலில் நடந்த கொள்ளை சம்பவம் கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப் புறங்களில் திறந்தவெளிகளில் 50-க்கும் மேற்பட்ட குலதெய்வ கோவில்கள் உள்ளன. பெரும்பாலான நாட்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மேற்கண்ட கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம், பூஜை சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமங்கலம் அருகே திரளி பகுதியில் முத்து அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு நடத்தி வருகிறார்கள். திறந்தவெளியில் உள்ள இந்த கோவில் பெரும்பாலான நாட்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும்.

காலை மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திரளி கிராமத்தை சேர்ந்த பூசாரி போதுராமன் (வயது 59) என்பவர் பூஜை செய்து விட்டு செல்வார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள அறைகளில் உண்டியல்கள், விளக்குள், பூஜை சாமான்களை வைத்து பூட்டி விட்டு செல்வார்.

கடந்த 31-ந்தேதி பூஜை செய்து விட்டு சென்ற போதுராமனால் அதன் பிறகு சொந்த வேலை காரணமாக கோவிலுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

2 வாரங்களுக்கு பிறகு போதுராமன் பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது வளாகத்தில் உள்ள அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது 2 கோவில் உண்டியல்கள் திருடப்பட்டு இருந்தது. ஒரு உண்டியை உடைத்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விளக்கு, பூஜை தட்டு உள்ளிட்ட பித்தளை சாமான்கள் திருடுபோய் இருந்தன. திருட்டுபோன உண்டியல்களில் காணிக்கை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போதுராமன் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

முத்துஅய்யனார் கோவிலில் நடந்த கொள்ளை சம்பவம் கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News