உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

Published On 2023-10-03 17:15 GMT   |   Update On 2023-10-03 17:16 GMT
  • நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி இளங்கோ தெருவை சேர்ந்தவர் கற்பகவள்ளி. இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள கூடலூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் வெளியூரில் அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று கற்பக வள்ளியின் தந்தை அழகருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை பார்ப்பதற்காக கற்பகவள்ளி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் அவருடைய குழந்தைகள் சேர்த்து வைத்திருந்த உண்டியல்கள் அனைத்தையும் உடைத்து அதிலிருந்து பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 13 லட்சம் என கூறப்படுகிறது.

இது குறித்து கற்பகவள்ளி சங்கரன்கோவில் தாலுகா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் டி.எஸ்.பி. அலுவலகம், நகர் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் அமைந்துள்ளது.

அனைத்து காவல் நிலையங்களும் அமைந்துள்ள என்.ஜி.ஓ. காலனி பகுதியில் மர்ம நபர்கள் 30 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News