பிற மாநிலங்களுக்கு கனிமவளங்களை எடுத்து செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை
- கேரளா, கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் மாநிலத்தின் நலனை பாதுகாப்பதில்அக்கறை கொண்டு செயல்படுகின்றனர்.
- தண்ணீரைப்போல ஆண்டுக்காண்டு கனிம வளங்களை இயற்கை நமக்கு அளிக்காது.
கடையம்:
அம்பை, தென்காசி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது மணலுக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள், சரள், செம்மண் ஆகியவற்றை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
கேரளா அல்லது கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சியாளர்கள் தங்கள் மாநிலத்தின் நலனை குறிப்பாக இயற்கை வளத்தை பாதுகாப்பதில் தான் அக்கறை கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்கள்.
கேரளாவில் முல்லை பெரியாறு அணை விவகாரத்திலும் சரி, கர்நாடகத்தில் மேகதாது அணை விவகாரத்திலும் சரி அவர்களது செயல்பாடுகள் முழுக்க முழுக்க அந்தந்த மாநிலத்தின் நலனையே கருத்தில் கொண்டு இருக்கிறது. இதேபோல் நம் தமிழகமும் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கை. அதிலும் குறிப்பாக நமது நாட்டின் சொத்தான கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்வதை அரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
தண்ணீர் கூட அதிக அளவு மழை பெய்தால் மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இயற்கை நமக்கு அளித்த நன்கொடையான கனிம வளங்கள் அப்படி அல்ல. இதை தண்ணீரைப்போல ஆண்டுக்காண்டு இயற்கை நமக்கு அளிக்காது. பல ஆண்டுகாலம் இயற்கை இதை உள்வாங்கிக் கொண்டு நமக்கு அளித்தது. ஆகவே அதை நமது மாநிலத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்க்க கூடாது. இதை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழக அரசு கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.