ஊராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை- 100 நாள் திட்டத்தில் பணி குறைப்பு என்று குற்றச்சாட்டு
- சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சமுதாயக்கூடம் கட்ட பலமுறை கிராம பொதுக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை.
பொன்னேரி:
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நெய்த வாயல் ஊராட்சி. இங்கு 100 நாட்கள் வேலைதிட்டத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஊராட்சி தலைவர் பாலன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அதிகாரி சந்திரசேகரை பொதுமக்கள் பொதுக்கழிப்பிடம் கட்டி பயன்பாடற்றுக் கிடப்பதாக நேரில் அழைத்துச் சென்று காண்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது,
100 நாட்கள் வேலை என கூறி குறைந்த நாட்களே வேலை வழங்குகிறார்கள். சமுதாயக்கூடம் கட்ட பலமுறை கிராம பொதுக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை. 3-வது மற்றும் 4-வது வார்டில் மின்மாற்றியை மாற்றி அமைக்க பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை குடிநீருக்காக கட்டப்பட்ட குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பழுதடைந்த நிலைமையில் உள்ளது.அரசாங்கத்தால் வீடு கட்டும் திட்டத்திற்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நான்கு வருடம் கடந்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.