கடும் குளிரை சமாளிக்க தீ மூட்டி குளிர் காயும் சாலையோர வியாபாரிகள்.
கொடைக்கானலில் வாட்டி எடுக்கும் குளிரால் வெறிச்சோடிய தெருக்கள் கம்பளி விற்பனை அமோகம்
- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
- சாலையோர வியாபாரிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஒருசில இடங்களில் தெருவில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் ெதாடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
இவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் விதவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல வண்ண பலூன்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு கண்கவர் வண்ணத்தில் ஜொலிக்கிறது.
இது தவிர கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிக்கும் வகையில் இயேசு கிறிஸ்து பிறப்பு, குடில், மரம் போன்றவை வித்தியாசமான வடிவங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஆனால் இரவு நேரம் மட்டுமின்றி மாலை நேரங்களிலேயே வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் முக்கிய தெருக்களில் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. ஸ்வெட்டர், தலைக்குல்லா போன்ற கம்பளி பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது.
சாலையோர வியாபாரிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஒருசில இடங்களில் தெருவில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
வரும் நாட்களில் பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் இத்தொழிலை நம்பி உள்ள ஓட்டல், விடுதி உரிமையாளர்கள், டாக்சி ஓட்டுனர்கள், வழிகாட்டிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.