உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகரில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யப்படும் கொய்யா பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

தருமபுரியில் கொய்யா பழம் விற்பனை அமோகம்

Published On 2023-03-20 09:58 GMT   |   Update On 2023-03-20 09:58 GMT
  • விவசாயிகள் கூறிய விலையில் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.
  • உடலுக்குத் தேவையான பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் அரூர், கம்பைநல்லூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் கொய்யாவை சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் பெரும்பாலும் ஏக்கர் கணக்கில் நிலத்தில் கொய்யா அதிக அளவு பராமரித்து வருகின்றனர்.

சொட்டு நீர் பாசனத்திலும், கிணறு, ஆற்று நீர் பாசனத்திலும் கொய்யா செடிக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள். இதனால் குறைந்த அளவில் முதலீடு செய்ததால் அதிக அளவு லாபம் கிடைக்கிறது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் ஏரி, குளங்கள் நிரம்பின. கிணற்றிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

பூச்சி தாக்குதல் குறைவால் கொய்யா பழம் நல்ல விளைச்சல் காணப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. வியாபாரிகள் அதிகம் பேர் நேரடியாக தோட்டத்திற்கே நேரடியாக வந்து கொய்யா பழங்களை வாங்கி செல்கின்றனர். இதனால் இடையில் இடைதரகர்கள் இல்லை. விவசாயிகள் கூறிய விலையில் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.

தருமபுரி நகர் பகுதியில் இருந்து வியாபாரிகள் கொய்யா பழங்களை தோட்டத்திற்கே சென்று வாங்கி கொண்டு தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இதனால் தள்ளுவண்டி கடையில் ஒரு கிலோ கொய்யா பழம் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொய்யா பழமும் தரமானதாகவும், சுவையாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கொய்யா மிகவும் ஏற்றது. கொய்யா பழத்தில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்காது. உடலுக்குத் தேவையான பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

கொய்யா ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடையும்.

பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு மிகுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்வார்கள். ஆனால், கொய்யா பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

இரவு நேரங்களில் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு நேரங்களில் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றனர்.

Tags:    

Similar News