உள்ளூர் செய்திகள்

ஜேடர்பாளையம் படுகை அணை காவிரி ஆற்றில் பரிசல் மூலம் தீயணைப்பு துறையினர் தேடும் காட்சி.

ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

Published On 2022-06-13 06:16 GMT   |   Update On 2022-06-13 06:16 GMT
ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது.

பரமத்திவேலூர்:

பெங்களூரு சிங்காபுரம் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில்ஸ்ரீதர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்துள்ளார். சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவிற்காக நேற்று அதே ஊரைச் சேர்ந்த 11 பேர்களுடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் சென்றுள்ளார். படுகை அணை காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலில் அவர்கள் குளித்து விட்டு கரை திரும்பினர். அப்போது ஸ்ரீதர் மட்டும் கரை திரும்பவில்லை.

இது குறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார், ராஜா வாய்க்காலில் மாணவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் நேற்று மாலை வரை தேடினர். ஆனால் இரவு ஆகிவிட்டதால் போதிய வெளிச்சம் இல்லாததால் தீயணைப்பு துறையினர் சென்று விட்டனர். மீண்டும் 2 -வது நாளாக இன்று (திங்கட்கிழமை) காலை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் மூலம் ராஜா வாய்க்காலில் பரிசல் மூலம் கல்லூரி மாணவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News