உள்ளூர் செய்திகள்

மாயாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததும் தெப்பக்காடு பாலம் கட்டுமான பணி தொடங்கும்

Update: 2022-08-15 09:42 GMT
  • கனரக வாகனங்கள் மட்டும் தரைப்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தற்போது இந்த பாலமும் சேதமடைந்துள்ளது.
  • கிளன் மார்கன் அணையில் இருந்து நீர் மாயாற்றில் திறந்து விடப்படுவதால் வெள்ளம் காணப்படுகிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது. குறிப்பாக கேரள மாநிலத்தை யொட்டிய கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

இதன் காரணமாக அங்குள்ள புன்னம்புழா, பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

வெள்ளப்பெருக்கால் மாயாற்றின் குறுக்கே கூடலூர்-மசினகுடியை இணைக்கும் தெப்பக்காடு பகுதியில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் கூடலூர்-மசினகுடி இடையே 5 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டிருந்தது.

தற்போது வெள்ளம் குறைந்துள்ளதால் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. வெளியூர் வாகனங்கள் எதுவும் தொடர்ந்து அந்த பாலத்தின் வழியாக அனுமதிக்கப்படவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக தெப்பக்காடு பகுதியில் இருந்த பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கி பல மாதங்களை கடந்தும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.

இதனால் மாயாறு தரைப்பாலம் தான் மசினகுடி-கூடலூர் போக்குவரத்துக்கு ஆதாரம். தற்போது மாயாறு தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கனரக வாகனங்கள் மட்டும் தரைப்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தற்போது இந்த பாலமும் சேதமடைந்துள்ளது.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜூ கூறியதாவது:-

மாயாறு தரைப்பாலம் வனத்துறைக்கு சொந்தமானது. மழை மற்றும் கனரக வாகன போக்குவரத்தால் பாலம் சேதம் அடைந்துள்ளது. மாயாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததும் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மழை குறைந்த நிலையிலும் கிளன் மார்கன் அணையில் இருந்து நீர் மாயாற்றில் திறந்து விடப்படுவதால் வெள்ளம் காணப்படுகிறது. தெப்பக்காடு பாலத்துக்கான அஸ்திவார பணிகளுக்கு குழி தோண்டும் போது, தண்ணீர் சுரக்கிறது. ஆற்றில் தண்ணீர் குறைந்த பின்னரே கட்டுமான பணிகளை தொடங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News