உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லியில் இரவில் போடப்பட்ட தார் சாலை காலையில் பெயர்ந்தது- அதிகாரிகள் விசாரணை

Published On 2023-04-12 15:59 IST   |   Update On 2023-04-12 15:59:00 IST
  • இரவு லட்சுமிபுரம் சாலையில் தார் ஊற்றி புதிய சாலை அமைக்கப்பட்டது.
  • ஜல்லியில் தார் ஊற்றாமல் போடப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பூந்தமல்லி:

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பிரதான சாலை மலையம்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது.

இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், தனியார் பள்ளிகள், மற்றும் வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால் தினந்தோறும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்த இந்த சாலை பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து பூந்தமல்லி நகராட்சி சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இரவு லட்சுமிபுரம் சாலையில் தார் ஊற்றி புதிய சாலை அமைக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்த சாலையில் பள்ளம், மேடுகளை சரி செய்யாமலும் குறிப்பிட்ட அளவு தார் ஊற்றாமலும் போடப்பட்டதாக தெரிகிறது.

அதிகாலையில் அந்த வழியாக சில வாகனங்கள் சென்ற நிலையில் புதிய சாலை முழுவதும் பெயர்ந்து வரத்தொடங்கியது. சாலை முழுவதும் ஜல்லி கற்களாக மாறின.

இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு வந்தனர். அவர்கள் புதிய தார் சாலையில் இருந்து ஜல்லி கற்களை வெறும்கையாலேயே அள்ளினர். ஜல்லியில் தார் ஊற்றாமல் போடப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். சிறிது நேரத்தில் அங்கு வந்த தொழிலாளர்கள் இதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்த தொழிலாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து தரமான முறையில் சாலையை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News