உள்ளூர் செய்திகள்

சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் ஆய்வு

சணப்பை பயிரிட்டு விவசாயிகள் பயன்பெறலாம்

Published On 2022-06-07 09:36 GMT   |   Update On 2022-06-07 09:36 GMT
  • ஏக்கருக்கு 20 கிலோ வீதம் சணப்பை விதைப்பு செய்ய வேண்டும். சணப்பு மிக வேகமாக வளரக்கூடிய பயிர். 7 வாரத்தில் பூப்பூக்க துவங்கிவிடும்.
  • மண்ணுக்கு வனப்பும் வளமும் தரும் சணப்பு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நெல் சாகுபடி துவங்குவதற்கு முன்னும் தென்னையில் ஊடுபயிராகவும் பயிரிட்டு பயன் பெறலாம்

மதுக்கூர்:

மதுக்கூர் வட்டாரத்தில் தற்பொழுது கோடை நெல் அறுவடை மற்றும் 50 சதவீத குறுவை நடவு முடிந்து உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் நெல் சாகுபடி தொடங்குவதற்கு முன் சணப்பு பயிரினை பசுந்தாள் உர பயிராக பயிரிட்டு உரச் செலவை குறைக்க முடியும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் சணப்பை விதைப்பு செய்ய வேண்டும். சணப்பு மிக வேகமாக வளரக்கூடிய பயிர். 7 வாரத்தில் பூப்பூக்க துவங்கிவிடும். இதன் ஆழமானவேர் அமைப்பினால் மண்ணுக்குள் நன்றாகவே ஊடுருவி மண்ணின் கட்டமைப்பையும் மாற்றக்கூடியது.

இப்பயிரின் முக்கியத்துவமே இது தழைச்சத்தை காற்றிலிருந்து கிரகித்து ரைசோபியம் எனும் நுண்ணுயிர் மூலம் வேர் முடிச்சுகளில் வைத்திருந்து பயிருக்கு அளிக்கக் கூடிய தன்மை உடையது. 7 வாரங்களில் இதை மண்ணில் மடக்கி உழுவதன் மூலம் ஏக்கருக்கு 5 டன் வரை தழைகளை மண்ணில் சேர்க்கும்.

ஏக்கருக்கு 40 முதல் 50 கிலோ வரை தழைச்சத்தை மண்ணில் சேர்க்கும். தழை சத்துக்காக யூரியா வாங்கி செலவழித்து பயிரிடுவதை காட்டிலும் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்து மண்ணில் மடக்கி உழுவதால் உரச் செலவை மிக எளிதாக குறைக்க முடியும். எனவே விவசாயிகள் எளிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உரச் செலவை குறைக்கவும் மண்ணுக்கு வனப்பும் வளமும் தரும் சணப்பு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நெல் சாகுபடி துவங்குவதற்கு முன்னும் தென்னையில் ஊடுபயிராகவும் பயிரிட்டு பயன் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக சிரமேல்குடி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் வாட்டாகுடி, அத்திவெட்டி, இளங்காடு மற்றும் புலவஞ்சி போன்ற பகுதிகளில் சணப்பை பயிரிட்டுள்ள விவசாய நிலத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பசுந்தாள் உரப் பயிரின் பயன்கள் குறித்து எடுத்து கூறினார்.

Tags:    

Similar News