உள்ளூர் செய்திகள்

குத்தகை விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்

Published On 2025-02-20 11:31 IST   |   Update On 2025-02-20 11:31:00 IST
  • குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
  • நெல்லை கொட்டி வைத்து, கொள்முதல் செய்வதற்கு காத்துக் கிடக்கின்றனர்.

மன்னார்குடி:

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார் குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை கொடுப்பதற்காக தமிழ்நாடு வேளாண் துறை மூலம் விளைநிலங்கள் குறித்து கணினி பதிவேற்றம் நடைபெற்று வருகிறது. தமிழக நிலப்பரப்பில் 60 சதவீதம் கோவில் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களை குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

குத்தகை விவசாயிகளுக்கும் உரிய அடையாள அட்டை வழங்குவதற்கான கணினி பதிவேற்றம் செய்திட தமிழக அரசு அவசர கால நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் திறந்தவெளி கிடங்குகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனை கடந்த சில ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் தற்போது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் அறுவடை தொடங்கி உள்ளதால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வளாகங்களில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை கொட்டி வைத்து, கொள்முதல் செய்வதற்கு காத்துக் கிடக்கின்றனர். எனவே, இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து திறந்தவெளி கிடங்குகளை திறந்து நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு விரைந்து அனுப்புவதற்கு அரசு முன்வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News