உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் வாலிபர் இறந்ததாக புகார்

Published On 2022-11-10 10:10 GMT   |   Update On 2022-11-10 10:10 GMT
  • காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், ஓரிக்கை பாலாறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் ஒரு வார காலமாக கலந்து வருவதால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாண்டுகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகன் சதிஷ் குமார். (21) மனநலம் பாதிக்கப்பட்டவர்.

சதீஷ் குமாருக்கு நேற்று அதிகாலையில் இருந்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் அவர் இறந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி -தமிழரசன் தம்பதியின் 10 மாத குழந்தை இமித்திரா மற்றும் 4 வயது சிறுவன் விஷ்ணுவர்தன் ஆகியோர்களுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தினர். கலந்து கொண்ட 45 நபர்களில் ஓபி குளம் பள்ளத்தெருவை சேர்ந்த விஜி (வயது 35), மோனிஸ்ரீ (9), பிரியதர்ஷினி (14) ஆகிய 3 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கண்டறியப்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ் கூறியதாவது:- மாண்டுகணீஸ்வரர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமடைந்து குறைந்த ரத்த அளவு உருவாகி அதிர்ச்சி ஏற்பட்டது. இது மிகவும் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நீரிழப்பு காரணமாக ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாகும். குறைந்த ரத்த அளவு ரத்த அழுத்தம் குறைவதற்கும் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைவதற்கும் வழிவகுக்கும். இதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதுமட்டுமின்றி ரைஸ்மில்லில் பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த இருளர் இன பெண் இரையரசி (வயது 20) உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது.

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களையும் கண்காணித்து வருகிறோம். குடிநீர் பிரச்சினையால் இந்த வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுபோல் தெரியவில்லை. குடிநீர் பிரச்சினையால் வயிற்று போக்கு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் பலருக்கும் பாதிப்பு இருக்கும். இவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நாங்கள் மருத்துவ முகாம் நடத்தினோம். தண்ணீரில் கூடுதலாக ஒரு சதவீதம் குளோரின் கலந்து விநியோகிக்கும்படி வலியுறுத்தியுள்ளோம். தண்ணீரையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், ஓரிக்கை பாலாறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் ஒரு வார காலமாக கலந்து வருவதால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News