உள்ளூர் செய்திகள்

கே.கே.நகரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2023-03-29 08:55 GMT   |   Update On 2023-03-29 08:55 GMT
  • நெசப்பாக்கம் காணுநகர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
  • பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அசோக் தினசரி மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

போரூர்:

சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது.

இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் நேற்று நள்ளிரவு மதுபோதையில் கற்களுடன் புகுந்த வாலிபர் ஒருவர் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தார். ஆனால் நீண்ட நேரம் போராடியும் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் காட்சிகளை ஐதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணித்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக நெசப்பாக்கம் காணுநகர் பகுதியை சேர்ந்த அசோக் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அசோக் தினசரி மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

சம்பவத்தன்று மது போதையில் இருந்த அசோக்கிற்கு மேலும் மது குடிக்க பணம் தேவைப்பட்டது. அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை எளிதாக உடைத்து பணத்தை எடுத்து சென்றுவிடலாம் என்று எண்ணிய அவர் கற்களுடன் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அது தோல்வியில் முடிந்ததால் விரக்தியடைந்த அசோக் அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News