உள்ளூர் செய்திகள்

கணவர் கட்டிய தாலிக்கயிறின் ஈரம் காயும் முன்பு கல்லூரி காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்

Update: 2023-02-03 10:23 GMT
  • போலீசார் விசாரணையில் ரஞ்சனா கல்லூரி காதலன் பரந்தாமனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து புதுப்பெண் மற்றும் அவரது காதலனை தேடி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வளநாடு கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனா (வயது 21). இவர் வளநாடு பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கும் அதே கல்லூரியில் சென்ற ஆண்டு பி.காம். முடித்த மருங்காபுரி வளநாடு கைகாட்டி ராஜபாட்டி பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் (22) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியது. ரஞ்சனாவும் பரந்தாமனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இது ரஞ்சனாவின் பெற்றோரின் காதுகளுக்கு எட்டியது. பின்னர் பரந்தாமன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கடிவாளம் போட்டனர். காதலனை மறந்து விடுமாறு மகளை வற்புறுத்தினர். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.

அதைத்தொடர்ந்து ரஞ்சனாவுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பின்னர் அவசர, அவசரமாக திண்டுக்கல் கணவாய்பட்டி கே.குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்த உறவுக்கார வாலிபர் வெங்கடேஷ் (33) என்பவருடன் கடந்த ஜனவரி 30-ந்தேதி ரஞ்சனாவுக்கு திருமணம் செய்து வைத்தனர். பின்னர் புதுமண தம்பதியினர் இருவரும் துவரங்குறிச்சிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

புதுமனைவியை வெளியில் அழைத்து செல்லும் ஆர்வத்துடன் மணமகன் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது ரஞ்சனா கணவரிடம் பக்கத்து தெருவில் வசிக்கும் தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறியுள்ளார்.

ஆசை மனைவியின் வேண்டுகோளை வெங்கடேஷ் தட்டவில்லை. அதைத்தொடர்ந்து ரஞ்சனா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் ரஞ்சனா ஓட்டலுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் ஆடிப்போன வெங்கடேஷ் தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆளுக்கு ஒரு திசையில் சென்று ரஞ்சனாவை தேடி பார்த்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரஞ்சனா கல்லூரி காதலன் பரந்தாமனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

இதுகுறித்து வெங்கடேஷ் துவரங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து புதுப்பெண் மற்றும் அவரது காதலனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News