உள்ளூர் செய்திகள்

கர்ப்பம் எனக் கூறி ஏமாற்றி அரசின் உதவித்தொகை பெற்ற இளம்பெண்

Published On 2022-06-18 14:54 IST   |   Update On 2022-06-18 14:54:00 IST
  • சினிமாவில் கர்ப்பம் தரிக்காத பெண், வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு கர்ப்பிணி என பலரையும் ஏமாற்றுவதற்காக நடிப்பது உண்டு.
  • ஆனால் உண்மையில் ஒரு பெண், ஊராரை மட்டுமின்றி, அரசையும் ஏமாற்றி கர்ப்பகால உதவித் தொகை பெற்றுள்ளார் என்பது பலருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

தக்கலை:

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இரவிபுதூர் கடை அருகே உள்ள குருவிளைகாடு காலனியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமான 2 மாதத்தில் கர்ப்பம் அடைந்ததாக கூறிய இளம்பெண், அப்போதே கணவர் வீட்டில் இருந்து தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார். தனது ஊரிலும் கர்ப்பிணி என்று கூறிக்கொண்டு இளம்பெண் சுற்றி வந்துள்ளார்.

மேலும் கர்ப்பிணிகளுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை அரசு வழங்கும் உதவித் தொகைக்கும் இளம்பெண் விண்ணப்பித்து உள்ளார். அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவருக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சையை முறைப்படி பெற்ற அந்தப் பெண்ணுக்கு பிரசவ காலமும் வந்து விட்டது. இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்குச் செல்வதாக ஊரில் கூறிவிட்டு இளம்பெண் தாயுடன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்குச் சென்ற மறுநாளே, ஊருக்குத் திரும்பிய பெண், மூளை வளர்ச்சி பெறாமல் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து விட்டதாகவும், ஆபரேசன் செய்து தான் குழந்தை உடலை எடுக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.

அவரது பேச்சு ஊர் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. குழந்தை உடல் எங்கே என்று கேட்ட போது ஆஸ்பத்திரியில் தரவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பொதுமக்களுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. ஆபரேசன் செய்த பெண் உடனடியாக எப்படி வீடு திரும்பமுடியம் என கேள்வியும் எழுந்தது.

இது தொடர்பாக தக்கலை அரசு ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்ட போது குறிப்பிட்ட இளம்பெண் கர்ப்பமே தரிக்கவில்லை என்பதும், அவர் வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு உறவினர்களையும் ஊராரையும் ஏமாற்றி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது. ஆஸ்பத்திரியில் அந்தப் பெண்ணுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை. மேலும் பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அவரது தாயாரிடம் இதுகுறித்து எழுதி வாங்கிவிட்டு அனுப்பி விட்டதாகவும் கூறியுள்ளனர். இதன்மூலம் கர்ப்பிணி நாடகம் ஆடிய பெண்ணின் குட்டு அம்பலமானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் கணவர் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் போலீஸ் நிலையம் விரைந்து வந்தனர். அங்கு தன்னை ஏமாற்றிய பெண் இனி வேண்டாம் என கணவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு வீட்டாரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கர்ப்பிணி எனக் கூறி ஏமாற்றிய இளம்பெண் அரசின் உதவித் தொகையை எப்படி பெற்றார்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தக்கலை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜையன் கூறுகையில், நிறைமாத கர்ப்பிணி என இளம்பெண் தாயாருடன் வந்து சிகிச்சைக்கு சேர்ந்தார். ஆனால் அவர் கர்ப்பம் இல்லை என பரிசோதனையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்தப் பெண்ணை எச்சரித்து, அவரது தாயாரிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தோம். இளம்பெண்ணுக்கு ஆபரேசன் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.

Tags:    

Similar News