உள்ளூர் செய்திகள்

பூதப்பாண்டி அருகே குடிபோதை தகராறில் கொத்தனார் குத்திக்கொலை

Update: 2022-12-01 10:53 GMT
  • டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர்.
  • ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே திட்டுவிளை ஜோசப் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் எடிசன் (வயது 42), கொத்தனார்.

இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று வீட்டிற்கு வந்தார். இவருக்கும் அவரது சகோதரர் மார்ட்டின் ஜெயராஜ் (40) என்பவருக்கு இடையே குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின் ஜெயராஜ் அவரது அண்ணன் ஜார்ஜ் எடிசனை நெஞ்சில் சரமாரியாக குத்தினார்.

இதில் ஜார்ஜ் எடிசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அண்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைப் பார்த்த மார்ட்டின் ஜெயராஜ் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். உடனடியாக ஜார்ஜ் எடிசனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அப்போது அங்கு டாக்டரிடம் தனது அண்ணன் ஜார்ஜ் எடிசன் விபத்தில் சிக்கியதாக கூறினார். டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர். இதுபற்றி ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அங்கு வந்து மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் அவர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

பின்னர் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மார்ட்டின் ஜெயராஜை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

பிடிபட்ட மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்திய போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர் ஜார்ஜ் எடிசனை குத்தியதாக கூறினார். இதிலிருந்து தப்பிக்க விபத்தில் சிக்கியதாக நாடகம் ஆடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது.

சகோதரரை தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News