மனைவியை கொலை செய்து விட்டு கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றிய தொழிலாளி கைது
- எனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா தேவி (29) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
- சரோஜா தேவியின் கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக கீழ்மாத்தினிப்பட்டியில் வசித்து வந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்ஷன் (8) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
ராஜசேகர் பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் கோவித்துக் கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு தேவி வந்து விட்டார். அங்கு வந்த ராஜசேகர் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுக்கவே மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ராஜசேகரை அவரது உறவினர் வீடுகளில் தீவிரமாக தேடி வந்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ராஜசேகரை தேடி வந்தனர்.
அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்று இரவு திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ராஜசேகர் பதுங்கி இருந்தது தெரிய வரவே போலீசார் அங்கு சென்று அவரையும் அவருடன் இருந்த கள்ளக்காதலியையும் கைது செய்தனர். பின்னர் போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா தேவி (29) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சரோஜா தேவியின் கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக கீழ்மாத்தினிப் பட்டியில் வசித்து வந்தார். இதனால் நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்த விபரம் எனது மனைவிக்கு தெரியவந்தது. இதனை வைத்து அவர் தினேஷ் என்பவருடன் பழக்கத்தில் இருந்தார்.
இதனை நான் தட்டிக்கேட்டதால் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று தினேசுடன் தேவி பேசியது மற்றும் அவரது புகைப்படங்கள் குறித்த ஆதாரத்தைக் காட்டி கேட்ட போது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
நீ கள்ளத்தொடர்பில் இருக்கும் போது நான் வேறு வாலிபருடன் பேசக்கூடாதா எனக் கேட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு அதிகமானது. எனவே அவரை கத்தியால் கழுத்தை அறுத்து வீட்டைப் பூட்டி விட்டு சென்று விட்டேன். அப்போது அங்கு அய்யப்ப பக்தர்களின் பஜனை கச்சேரி நடந்ததால் நாங்கள் சண்டை போட்டது வெளியே தெரியவில்லை. அதன் பிறகு எனது நண்பர்கள் சொல்லித்தான் தேவி இறந்த விபரம் எனக்கு தெரிய வந்தது. இதனால் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் எனது 3 குழந்தைகளையும் என் தாயிடம் விட்டு விட்டு சென்று விட்டேன். அதன் பிறகு என் கள்ளக்காதலி சரோஜா தேவியுடன் திருச்சிக்கு வந்து விட்டேன்.
என் கையில் பணம் இல்லாததால் எனது நண்பருக்கு போன் செய்து கூகுல்பே மூலம் பணம் அனுப்புமாறு கேட்டேன். அவரும் பணம் அனுப்பி விட்டு போலீசார் தேடுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார்.
நான் செல்போனை ஆன் செய்து பேசியதால் போலீசார் எனது இருப்பிடத்தை அறிந்து என்னை பிடித்து விட்டனர். நான் கொலை செய்த குற்ற உணர்ச்சி இருந்ததால் இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரலாம் என முடிவு செய்திருந்தேன். அதற்காக பஸ்சில் ஏறி காத்திருந்தபோது போலீசார் என்னையும், சரோஜாதேவியையும் பிடித்து விட்டனர் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ராஜசேகர் மற்றும் சரோஜா தேவியை கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ராஜசேகர் திண்டுக்கல் சிறையிலும், சரோஜா தேவி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.