உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் மரணம்

Published On 2024-01-03 10:41 GMT   |   Update On 2024-01-03 10:41 GMT
  • உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • தாய் இறந்ததை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

சேலம்:

சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள பெருமாம்பட்டி, கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவருடைய மனைவி மணிமேகலை (வயது 25). வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள். நிறைமாத கர்ப்பிணியான மணிமேகலையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் அன்று இரவு மணிமேகலைக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை நேற்று இரவு திடீரென இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் கூடியதால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. தாய் இறந்ததை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இது குறித்து உறவினர்கள் கூறும் போது, பயற்சி டாக்டர் மூலம் மணிமேகலைக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால்தான் இறந்து போனார். மேலும் அறுவை சிகிச்சை செய்தது முதல் மணிமேகலையை பார்க்க டாக்டர்கள், ஊழியர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. மேலும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டபோதே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கின்றோம் என்று கூறியும் டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

தொடர்ந்து இன்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

இது பற்றி தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மருத்துவமனை முதல்வரை சந்தித்து மனு அளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து கம்யூனிட்டு கட்சியினர் உறவினர்களை அழைத்து சென்று இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டு முதல்வரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து சண்முகம் கூறுகையில் நல்ல நிலையில் இருந்த பெண் திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது அறுவை சிகிச்சை செய்த பிறகு குழந்தை நல்ல முறையில் பிறந்துள்ளது. தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாகவே பெண் உயிர் இழந்து உள்ளார். எனவே மருத்துவ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெண்ணின் இறப்பிற்கு உரிய நீதி வேண்டும் என்றார்.

Tags:    

Similar News