திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென பலத்த மழை கொட்டியது.
- மழை காரணமாக நடைபாதை வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென பலத்த மழை கொட்டியது. இன்றுகாலையும் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழைபெய்தது. சோழவரம், பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணியில் இன்று காலை விட்டு விட்டு பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இன்று கார்த்திகை மாத அமாவாசை ஆகும். எனினும் மழை தொடர்ந்து பெய்ததால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. குறைவான பக்தர்கள் கோவில் நுழைவுவாயிலில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.
திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கே.ஜி.கண்டிகை, நல்லாட்டூர், கனகம்மாசத்திரம், மத்தூர், திருவாலங்காடு, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சென்றனர்.
திருத்தணி நகரத்தில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப் பட்டுள்ளன. இதில் மழை நீர் தேங்கியதால் அவ்வழியே சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. மழை காரணமாக நடைபாதை வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
மாவட்டத்தில் அதி கபட்சமாக சோழவரத்தில் 34 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)வருமாறு:-
திருவள்ளூர்-3, சோழவரம் - 34 , தாமரைப்பாக்கம் - 27, கும்மிடிப்பூண்டி - 17 , பொன்னேரி - 15 , புழல் - 13 , பூண்டி - 13 ஆவடி - 11, ஊத்துக்கோட்டை - 7