வண்டலூர் பூங்காவில் வெப்பத்தை தணிக்க தண்ணீரில் உற்சாக குளியல் போடும் யானை
- கோடைவிடுமுறையையொட்டி பார்வையாளர்களை கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- புலிகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் அதற்கான ஏற்பாடுகள் மார்ச் மாத கடைசியில் இருந்து தொடங்கப்படும் என்றனர்.
வண்டலூர்:
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பூங்காவில் உள்ள வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
கோடைவிடுமுறையையொட்டி பார்வையாளர்களை கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவு வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்றாற்போல் தற்போதே பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடைகாலம் ஆரம்பமானதை தொடர்ந்து பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு போன்ற விலங்குகளுக்கு மதிய வேளையில் ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவை ஷவரில் உற்சாக குளியல் போட்டு செல்கின்றன.
குட்டையில் தேங்கி உள்ள தண்ணீரில் யானைகள் உற்சாக ஆட்டம் போடுகின்றன. செயற்கை அருவியில் இருந்து விழும் தண்ணீரில் மனித குரங்குகள் அவ்வப்போது வந்து தங்களது உடலை தண்ணீரில் நனைத்து சூட்டை தணித்து செல்கின்றன. இது பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மனித குரங்குகளுக்கு மதிய வேளையில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களான தர்பூசணி, கிர்ணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பழங்கள் கொடுக்கப்படுகிறது.
இதேபோல் மற்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கோடைக்காலம் தொடங்குவதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக பறவைகள் இருப்பிடங்களுக்கு அருகே தாகத்தை தீர்க்க கூடுதலாக ஆங்காங்கே தண்ணீர் வைக்கப்படுகிறது.
மேலும் பறவைகள் அமைக்கப்பட்ட கூண்டை சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகூண்டுகளின் உள்புறம் குளிர்ச்சியான சூழலில் இருக்கும்.
இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கூறும்போது, கோடை காலத்தை சமாளிக்க பறவைகள், விலங்குகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் முதல் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புலிகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் அதற்கான ஏற்பாடுகள் மார்ச் மாத கடைசியில் இருந்து தொடங்கப்படும் என்றனர்.