சீர்காழி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
- நடராஜன் இறந்து விட்ட நிலையில் ருக்மணி தனது குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
- சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருக்கோலக்கா தெரு சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ருக்மணி (வயது 80) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். நடராஜன் இறந்து விட்ட நிலையில் ருக்மணி தனது குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சீர்காழி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இவரது கூரை வீட்டின் சுவர் சேதமடைந்து இருந்தது. இந்நிலையில் வழக்கம்போல் ருக்மணி தனது வீட்டில் உறங்கியுள்ளார்.
இன்று அதிகாலை சேதம் அடைந்திருந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து வீட்டின் உள்ளே படுத்திருந்த ருக்மணி மீது விழுந்துள்ளது. இதில் அவர் ஈடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
வழக்கம் போல் அவரது மகள் உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்து கதவை திறந்த போதுதான் உள்ளே சுவர் இடிந்து கிடப்பது தெரிய வந்தது. பின்னர் இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது தான், தன் தாய் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உதவியுடன் சுவற்றை அகற்றி ருக்மணியின் உடலை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிராமநிர்வாக அதிகாரி தமிழ்மணி மற்றும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூதாட்டி ருக்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.