உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தம்பி

Published On 2023-04-01 13:00 IST   |   Update On 2023-04-01 13:00:00 IST
  • இருவரும் வீட்டை கேட்டதால் இருவரிடையே பாகப்பிரிவினை தகராறு இருந்து வந்தது.
  • கொலைக்கான காரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாமல்லபுரம்

திருகக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்திமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் ஜிப்சி காலனி பகுதி உள்ளது. இந்த காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ் (வயது 30). இவரது தம்பி சந்திரன் (27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒரே வீட்டில் கடந்த 15 வருடங்களாக கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். அந்த வீட்டின் அருகே அரசு சார்பில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 சென்ட் காலி நிலம் உள்ளது.

இந்த நிலையில் சந்திரன் தனிக்குடித்தனம் செல்ல விரும்பினார். இதற்காக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து தனக்குரிய பங்கை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒத்துக்கொண்ட வெங்கடேஷ், தற்போது வசித்து வரும் வீட்டை தான் எடுத்துக்கொள்வதாகவும், 3 சென்ட் நிலத்தை நீ எடுத்துக்கொண்டு வீடு கட்டிக்கொள் என்றும் கூறினார்.

அதற்கு சந்திரன் ஒத்துக்கொள்ளவில்லை. வீட்டுடன் கூடிய இடம் தனக்கு வேண்டும். 3 சென்ட நிலத்தை நீ எடுத்துக்கொள் என்றார். இருவரும் வீட்டை கேட்டதால் இருவரிடையே பாகப்பிரிவினை தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு வெங்கடேசை, அவரது மனைவி விநாயகி, சந்திரன் அவரது மனைவி நந்தினி மற்றும் நண்பர்கள் 3 பேர் என அனைவரும் ஒன்றாக வீட்டில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது வெங்கடேசனுக்கும், சந்திரனுக்கும் பாகப்பிரி வினை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து சந்திரனை அங்கிருந்து வெளியே அனுப்பு உள்ளனர்.

இதற்கிடையே மது போதையில் இருந்த சந்திரனுக்கு அண்ணன் மீதான ஆத்திரம் அடங்க வில்லை. வீட்டை தனக்கு தராத அண்ணனை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக சந்திரன் தனது வேட்டை துப்பாக்கிைய எடுத்துக்கொண்டு அதில் நண்பர் ஒருவரின் உதவியுடன் வெடிமருந்து மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளை நிரப்பினர்.

பின்னர் துப்பாக்கியுடன் தனது வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

விளக்கை போட்டால் அனைவரும் எழுந்து விடுவார்கள் என்பதால் சந்திரன் வெளிச்சத்திற்காக டார்ச் லைட்டை தனது தலையில் கட்டினார். பின்னர் மெதுவாக கதவை திறந்து வெங்கடேசை நோக்கி டார்ச் லைட் அடித்தார். பின்னர் வேட்டை துப்பாக்கியால் அவரது மார்பில் குறி பார்த்து சுட்டார்.

இதில் காயம் அடைந்த வெங்கடேஷ் எழுந்தார். துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டு அவரது மனைவி விநாயகியும் எழுந்தார். அப்போது அங்கு சந்திரன் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.

இதைபார்த்த விநாயகி கூச்சல் போட்டு அலறினார். வெங்கடேஷ் தம்பியிடம் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்து வெளியே ஓடினார். ஆனாலும் ஆத்திரம் அடைந்த சந்திரன், தப்பி ஓட முயன்ற வெங்கடேசனின் கழுத்து பகுதியில் சுட்டார். இதில் அவர் குண்டு பாய்ந்து இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்திரனை போலீசார் தேடினார்கள். அப்போது அவர் அந்த பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று சந்திரனை கைது செய்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் செந்தில் குமரன் ஆய்வு நடத்தினார். வெடிமருந்து உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தார். கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலைக்கான காரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News