உள்ளூர் செய்திகள்

தரைப்பாலம் அமைக்க கோரி பாலாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்

Published On 2022-11-20 11:40 IST   |   Update On 2022-11-20 11:40:00 IST
  • தொடர் மழையின் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
  • பாலாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பகுதி மக்கள் பல கி.மீ தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது.

வேலூர்:

வேலூர் பாலாற்றில் மேல்மொணவூர்-திருமணி பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரி சுமார் 8 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை தரைப்பாலம் அமைக்கப்படவில்லை.

இதனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் மேல் மொணவூரில் இருந்து திருமணி வரை பொதுமக்கள் தற்காலிகமாக மண் கொட்டி அமைக்கப்பட்ட தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாலாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பகுதி மக்கள் பல கி.மீ தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது.

எனவே தமிழக அரசு திருமணி-மேல்மொணவூர் இடையே பாலாற்றில் தரைப்பாலம் அமைக்க கோரி இன்று பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மார்தாண்டம் தலைமையில் பாலாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திருமணி, லத்தேரி, கீழ்மொணவூர், டி.கே.புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி தரைப்பாலம் அமைத்து தர வேண்டி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News