20 ஆண்டு தலைமறைவாக இருந்த கொள்ளையன் சென்னை விமான நிலையத்தில் கைது
- தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார்.
- தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, ரவிக்குமாரை கைது செய்து மேலும் விசாரணைக்கு தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.
ஆலந்தூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (43). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவரை கைது செய்ய தஞ்சாவூர், புதுக்கோட்டை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.ஆனால் இவர் போலீசிடம் சிக்காமல் தப்பியோடி, வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டார்.
இதை அடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ரவிக்குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும், எல்.ஓ.சி. போடப்பட்டிருந்தது.
தனது 23 வயதில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய ரவிக்குமார், 20 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு வராமல், வெளி நாடுகளிலேயே தங்கி டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாா்.
இனிமேல் போலீசாா் தேட மாட்டார்கள் என்று நினைத்து துபாயில் இருந்தவர் சொந்த ஊருக்கு செல்ல சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ரவிக்குமாரின் பாஸ்போா்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர், 20 ஆண்டுகளாக தஞ்சாவூர் போலீசாரால், திருட்டு வழக்குகளில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், ரவிகுமாரை வெளியே விடாமல் தடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீசுக்கு தகவல் கொடுத்தனா். தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, ரவிக்குமாரை கைது செய்து மேலும் விசாரணைக்கு தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.