ஜாமீனில் வெளியே வந்தவர் தலைமறைவாக இருந்த ரவுடி 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
- தனிப்படை போலீசார் கூடுவாஞ்சேரியில் பதுங்கி இருந்த வினோத்குமாரை நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.
- வினோத்குமார் பிரபல ரவுடி சிடி மணியின் வலது கையாக செயல்பட்டு வந்த கூட்டாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் புலிதேவன் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கானத்தூர் போலீசாரால் வினோத்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் இந்த நிலையில் ரவுடிகள் தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் குமரகுருபரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கூடுவாஞ்சேரியில் பதுங்கி இருந்த வினோத்குமாரை நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வினோத்குமாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வினோத்குமார் பிரபல ரவுடி சிடி மணியின் வலது கையாக செயல்பட்டு வந்த கூட்டாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.